பருத்தி சாகுபடி அதிக மகசூல் பெற ஆலோசனை
இது குறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் சம வயதுள்ள ரகத்தை தேர்ந்தெடுத்து ஒரு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். பூச்சி நோய் தாங்கி வளர வல்ல எஸ்விபிஆர்2 ரகத்தை தேர்ந்தெடுத்து பயிரிடலாம். சாணிப்பால் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தவும். விதைப்பிற்கு முன் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடோமோனஸ் புளூரோசன்ஸ் பயன்படுத்தி விதைக்க வேண்டும். காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் அமைத்து விதைத்து, வயலை சுற்றியுள்ள செடிகள், களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு போடுவது பூச்சி, நோய் தாக்குதலை குறைக்கும். விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளூரோசன்ஸ் ஏக்கருக்கு ஒரு கிலோ இட வேண்டும். நட்ட 20, 30 நாள்களில் வேப்ப எண்ணைய் ஒரு சதம் கரைசல் தூரில் ஊற்ற வேண்டும்.
ஊடு பயிராக வாய்க்கால்கள், பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணை புரியும். மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடு பயிராக மக்காசோளம், உளுந்து, சீனி அவரை ,ஓரப்பயிராக ஆமணக்கு, சூரிய காந்தி பயிரிட வேண்டும். உளுந்து ஊடு பயிராக பயிரிடுவதால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும். சீனி அவரை ஊடு பயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி, காய்ப்புழு தாக்குதல் குறையும்.
பயிறு வகை ஊடுபயிர் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது. ஆமணக்கு புரடீனியா புழு தாய்ப்பூச்சிகள் முட்டையிட கவர்ந்திழுக்கும். வாய்க்கால்களில் மக்கா சோளம் பயிரிட்டால் கிரைசோப்பா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருக்கத்திற்கு துணை புரியும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment